Saturday, July 6, 2013

4.67. கழிநெடிலடி முயற்சி

கவிதையில் யாப்பு: ரமணி--kavithaiyil yAppu: ramaNi

கவிதையில் யாப்பு
ரமணி

4.67. கழிநெடிலடி முயற்சி

(குறள் வெண்செந்துறை)
அளவொத்த அடியிரண்டில் எவ்வடியும் எச்சீரும்
தளையெதுவும் வருவதுவே குறள்வெண்செந் துறைப்பாவினம்.

(ஆசிரியத் தாழிசை)
அளவொத்த அடிமூன்றில் எவ்வடியும் எச்சீரும்
தளையெதுவும் வருகின்ற ஆசிரியத் தாழிசையே
எளிதாக நாமெழுத இன்னொருபா வினமாகும்.

(குறள் வெண்செந்துறை)
இவ்விரு பாவினம் எளிதாய் இயற்றி
செவ்விதின் முயல்வோம் கழிநெடில் அடிவகை.

அறுசீர்:
அன்றும் இன்றும் என்றும் உள்ளது ஒன்றே ஒன்றே
இன்றே நாமிதை உணர்ந்து கொள்வது நன்றே நன்றே.

எழுசீர்:
அன்றும் இன்றும் என்றும் உள்ளது ஒன்றே யாகும் பரமே
இன்றே நாமிதை உணர்ந்து கொளவது நன்றே யாகும் நமக்கு.

எண்சீர்:
மாடு மனையாள் வீடு செல்வம் கல்வி யெல்லாம் இருந்தும் கூட
பாடு படுவது குறைவது இல்லை பிள்ளை ஒன்று பெண்கள் ஐந்து.

ஒன்பதின் சீர்:
காலை எழுந்து ஆவி மணக்கும் காப்பி குடித்து
. பேப்பர் படித்துக் குளித்து
சாலை ஓய்ந்து காலி யானதும் மெல்ல நடந்து
. கோவில் செல்லும் முன்னே
வேலை எல்லாம் வழியில் முடிக்க வங்கி சென்றிட
. ஞாபகப் படுத்து பெண்ணே.

பதின் சீர்:
முகத்தில் சந்திரன் விழிகளில் சூரியன்
. நடையில் அன்னம் இடையில் மின்னல்
. . கால்களில் சலங்கை கொஞ்ச
அகத்தில் நினைத்ததை விரல்களில் அபிநயித்து
. விழிகளில் தருவித்து மேடையில் ஆடுவாள்
. . நாட்டிய மேதையாம் நங்கை.

பதினொரு சீர்:
வானம் பொழிந்து பூமி விளைந்து
. செல்வம் செழித்து நன்மை விளைந்து
. . மனிதர் யாவரும் மகிழ்ந்து
தானம் கொடுத்து நெறிகள் தழைத்து
. அன்புடன் வாழும் வழிவகை கற்றிட
. . உன்னருள் தந்திடு இறைவா!

பன்னிரு சீர்:
கேட்டது கிடைத்த குழந்தைப் பருவம்!
. முனைந்து படித்த பள்ளிப் பருவம்!
. . நினைத்தது செய்த இளமைப் பருவம்!
வேட்டது கிடைக்கும் வழிதெரி யாமல்
. நாளொரு கனவும் பொழுதொரு கவலையும்
. . சூழ்ந்திட வாழ்ந்திடும் இல்லறப் பருவம்!

பதினான்கு சீர்:
வருவது ஏற்றுக் கவலைகள் குறைத்து வந்தது போதும் என்றும்
. விழைவது சுருக்கித் தன்நெறி பார்த்து நடந்திட வேண்டும் என்றும்
குருவின் வார்த்தை கீதையில் கேட்டு, செய்வது நானல்ல நீயே
. பலன்கள் உனக்கே கண்ணா என்று வாழ்ந்திட ஞானம் பிறக்கும்.

பதினாறு சீர்:
வந்தது ஒன்று போனது வேறு
. படித்தது ஒன்று கிடைத்தது வேறு
. . சொன்னது ஒன்று செய்தது வேறு
. . . நினைத்தது ஒன்று நடந்தது வேறு 
பந்தது போலக் கால்களில் சிக்கி
. அங்கும் இங்கும் உதைக்கப் பட்டு
. . இலக்கெது என்று புரிந்தி டாமல்
. . . காலச் சுழலில் உழல்கின் றேனே!

*****